தாவீது கோலியாத்தை வீழ்த்திய கதை
🌿எதிர்த்து நில்லுங்கள்..!
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் பிரியமான என் அன்பு சகோதர, சகோதரிகளே !
தாவீது கோலியாத்தை வீழ்த்திய கதையை நாம் அனைவரும் அறிந்ததே. சவுல் அரசர் முதற்கொண்டு இஸ்ரயேலின் பெரிய வீரர்கள் எல்லாம் பார்த்து பயந்து நடுங்கிய கோலியாத்தை, ஆடு மேய்க்கும் இளம் வயதுடைய தாவீது எப்படி வீழ்த்த முடிந்தது?
இஸ்ரயேலின் அரசனான சவுல் கீழ்ப்படியாமையின் காரணமாக கடவுளின் ஆசியை இழந்து விடுகிறான். அதனால் அவன் கோலியாத்தை பார்த்து பயப்படுகிறான். ஒரு அரசனே தன் எதிரியை பார்த்து பயப்படும் போது மக்களும் அதே மனநிலையில்தானே இருப்பார்கள். தாவீது மட்டும் ஏன் பயப்பட வில்லை?
தாவீது ஆண்டவரின் அபிஷேகத்தை பெற்றவனாக, ஆணவம் அகங்காரம் நிறைந்த கோலியாத் என்கிற தீமையின் அரக்கனை ஆண்டவரின் துணை கொண்டு வீழ்த்த முடியும் என்று நம்பினான். அதுவும் கத்தியோ, வாளோ, ஈட்டி இன்றி வெறும் கவனையும் கல்லையும் வைத்து வீழ்த்தினான்.
இன்றைய சூழலில் நாமும். கடன்சுமை என்கிற பெரிய கோலியாத்தையும். வாழ்க்கையின் பாரங்கள் அதிகரித்ததால் தோல்வி பயத்தால் நாம் அஞ்சி நடுங்குகின்றோம். சவுலை போல பாவத்திற்கு அடிபணிந்ததால் வாழ்க்கை சுமைகளை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி நடுங்குகின்றோம்.
திருமுழுக்கு, திவ்ய நற்கருணை, அருள் சாதனங்கள் வழியாக ஆண்டவர் இயேசு நம்மிடம் இருப்பதை மறந்து விடுகிறோம். தீமைகளையும் தீயோனையும் "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணையால் எதிர்கொள்ள முடியும்"என நம்பிக்கை கொள்ள மறந்து விடுகிறோம்.
நாம் கடவுளின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது நம்மில் நேர்மறை சிந்தனைகள் வேகமாக வளரும். எனவே தான் ஆண்டவர் யோசுவாவை பார்த்து இப்படிச் சொல்கிறார்.
திடமும் உறுதியும் கொண்டு என் ஊழியன் மோசே கட்;டளையிட்ட எல்லாச் சட்டங்களையும் கடைப்பிடிப்பதில் கவனமாயிரு. நீ அதனின்று வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே. அப்பொழுதுதான் நீசெல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய்.
யோசுவா 1:8 இப்படியாக சொல்கிறது
இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம்எல்;லாம் நலம் பெறுவாய்; வெற்றி காண்பாய்.
நமது வாழ்க்கை போராட்டங்களில் விடுதலைப் பெற, நாம் செய்யும் தொழிலும் செயல்களிலும் வெற்றியை காண கடவுளுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அப்போது ஆண்டவர் நம்மை பார்த்து இப்படிச் சொல்வார்.
யோசுவா 1:9 இப்படியாக சொல்கிறது
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.
எனவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நாமும் தாவீதைப் போல ஆண்டவரின் துணைகொண்டு தீமைகளை, தோல்விகளை, வாழ்க்கைப் போராட்டங்களை, எதிர்த்து நிற்போம் தூய ஆவியானவர் நமக்கு துணை புரிவார்.
ஆமென்.
- உங்கள் சகோதரன் அந்தூஸ்
🌿 ரோசா கார்மெலி தியான மையம்.
_ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!_
1 கொரிந்தியர் 1:25
ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.
Comments
Post a Comment